ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை மசோதா காங். தலைவரையும் அறக்கட்டளை உறுப்பினராக சேர்ப்பது தான் நீதி: மாநிலங்களவையில் வைகோ பேச்சு

சென்னை: ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை மசோதாவின் போது காங்கிரஸ்கட்சி தலைவரையும் அறக்கட்டளை உறுப்பினராக சேர்ப்பது தான் நீதி என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசியதாவது: நவம்பர் 19. ஜாலியன் வாலாபாக் என்ற பெயரை உச்சரித்தாலே, புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்கள், போராளிகளின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்கின்றது. நினைத்தாலே நெஞ்சை நடுங்க வைக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலை,  பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது. அந்த நாள், சீக்கிய மக்கள் கொண்டாடுகின்ற பைசாகி திருநாள் ஆகும்.ஜாலியன் வாலாபாக்கில் உயிர் தப்ப முயன்று, அங்கிருந்த ஒரு கிணறுக்குள் குதித்த 120 பேர் இறந்தனர். மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டதாக அரசு சொன்னது, உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்.

இதன்பிறகு, ஒரு சிறுவன் அந்த  இடத்திற்குச் சென்றான். ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு குடுவையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தான். தன் தங்கையிடம் கொடுத்து, இது நாம் வணங்க வேண்டிய தியாகச் சின்னம் என்று சொன்னான். அப்படிச் சொன்னவன், வேறு  யாரும் அல்ல. மாபெரும் புரட்சியாளன் பகத்சிங். அதேபோல, உத்தம்சிங் என்ற மாவீரன் உதயமானான். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே 13ம் தேதி, ஆனால் மாதம்தான் மார்ச், 1940 ஆம் ஆண்டு லண்டனில் மைக்கேல் டயரைச் சுட்டுக்  கொன்றான். உத்தம்சிங்குக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, ஜாலியன் வாலாபாக் வந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை, காங்கிரஸ் தலைவர்கள் முன்னின்று நடத்தினார்கள். நான் அரசியலுக்காகப் பேசவில்லை.  நீங்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் ஜாலியன்வாலாபாக் அறக்கட்டளையின் உறுப்பினராகச் சேர்ப்பது தான் நீதி ஆகும்.இவ்வாறு மாநிலங்களவையில் வைகோ கூறினார்.

Related Stories: