ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு உத்தரவில் திருத்தம் கோரிய அமலாக்கத்துறை மனு ஏற்பு: டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றாலும்,  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.இதனால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் வரும் 27ம் தேதி மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.  இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவில் திருத்தம் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுரேஷ் குமார் கெயித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது வாதத்தில், “ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு அதன் உத்தரவில் கையெழுத்திட்ட பின்னர், அதில் திருத்தம் செய்வது என்பது கண்டிப்பாக கூடாது. ஏனெனில் அது குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும்’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இதையடுத்து வழங்கப்பட்ட உத்தரவில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சத்தில் 35, 36, 39 மற்றும் 40 ஆகிய பத்திகளில் தான் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது என்று எதுவும் கிடையாது.

இருப்பினும் அதில் எழுத்து சார்ந்த பிழை தானே தவிர பொருட்பிழை கிடையாது. இதனை நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. இதில் அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கையை ஏற்று திருத்தம் செய்யப்பட்டு புதிய உத்தரவு நகல் வழங்கப்படும் என தெரிவித்து, நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.

ஜாமீன் மனு இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கோரி ப.சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பானுமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: