முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நவம்பர் இறுதி வாரத்தில் அல்லது  டிசம்பரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தத்திற்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மேயர்  பதவிக்கு கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டத்திருத்தம் செய்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பழனிசாமி அரசு, கடந்த 2018-ம் ஆண்டு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் மீண்டும் மாற்றம் செய்தது. இதனால், தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி,  பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டிருந்தது.நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள்  விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும் பல துறைகள் குறித்த கொள்கை ரீதியான பல்வேறு முடிவுகளை எடுக்க  உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில்,தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: