கோவையில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கிடம் 5 நாள் விசாரிக்க முடிவு : நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தடாகம் போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கோவை ஆனைகட்டி மூலகங்கன் வனப்பகுதியில் கடந்த 9ம் தேதி சிறப்பு அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் மஞ்சகண்டி வனப்பகுதியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (32) சிக்கினார். அவரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவரை அதிரடிப்படை போலீசார் தடாகம் போலீசில் ஒப்படைத்தனர்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே மாவோயிஸ்ட் தீபக்கை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வருகிற 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கைதிகளுக்கான தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தீபக் நேற்று முன்தினம் இரவு தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், தீபக்கை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தடாகம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நாளை நடைபெறவுள்ளது.

Related Stories:

>