23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரியில் கும்பாபிஷேகம்: பாலாலய முகூர்த்தகால் நடப்பட்டது

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலை கிபி 1010ம் ஆண்டு ராஜராஜசோழன் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்தார். அதன்பிறகு தஞ்சைய ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்களும் பல்வேறு காலகட்டங்களில் கோயிலில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் செய்து வந்தனர். 1996ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 12 ஆண்டுக்கு பிறகு நடந்த வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. தொடர்ந்து பக்தர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 23 ஆண்டுக்கு பிறகு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கும்பாபிஷேக தேதியை அறநிலையத்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்திய தொல்லியல்துறையினர் கோயிலில் பெரிய கோபுரம், அம்பாள் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், முருகன் சன்னதி, சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் திருப்பணி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேத்துக்காக பாலாலய யாகசாலை அமைக்க நேற்று காலை பாலாலய முகூர்த்தக்காலுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடத்தினர். பின்னர் கோயிலின் ஈசானிய மூலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைதொடர்ந்து வரும் 29ம் தேதி நான்கு கால யாகசாலை பூஜையுடன் துவங்கி டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் நடக்கிறது. அதன்பிறகு உற்சவர் சிலைகள் நடராஜர் மண்டபத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.

நேற்று நடந்த விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன்,கோயில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரங்கராஜன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணி நடந்து வருகிறது. கோயிலில் கும்பாபிஷேகத்தை வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த சிவாச்சாரியார்கள் மூன்று தேதிகளை குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.

கும்பாபிஷேகத்துக்கான தேதியை தமிழக முதல்வர் அல்லது அறநிலையத்துறை அமைச்சர் அல்லது கலெக்டர் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் தொடர்பான ஆய்வு கூட்டத்தை கலெக்டர் கடந்த அக்டோபர் மாதமே கூட்டி யார் யார் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். ஆனால் இன்னமும் கும்பாபிஷேகம் எப்போது என தேதி அறிவிக்கவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Related Stories: