ஆங்கில வழிக் கல்வி மோதல் முற்றுகிறது நான் 3 திருமணம் செய்ததால்தான் 2 ஆண்டு சிறையில் இருந்தீர்களா? ஜெகன் மோகனுக்கு பவன் கல்யாண் ஆவேச கேள்வி

விஜயவாடா: நான் மூன்று முறை திருமணம் செய்ததால், நீங்கள் சிறை செல்ல நேரிட்டதா?’’ என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், `அரசு நடத்தும் பள்ளிகள் ஆங்கில மீடியமாக மாற்றப்படும்’ என்று அறிவித்தார்.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜன சேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், முறையான பயிற்சி பெற்ற ஆங்கில வழி கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி பள்ளியாக எப்படி மாற்ற முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெகன் மோகன்,  ‘உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படித்தனர்? என கேட்டிருந்தார். அப்போது, பவன் கல்யாணிடம், `உங்களுக்கு 3 மனைவிகள் உள்ளனர். நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் எவ்வழி கல்வி பள்ளியில் படிக்கிறார்கள்?’ என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பவன் கல்யாண், ``நான் 3 பெண்களை மணந்து இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறீர்கள்? நான் 3 திருமணங்கள் செய்து கொண்டதால், உங்களுக்கு என்ன பிரச்னை? இதனால்தான், நீங்கள் இரண்டு ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டியதாகி விட்டதா?’’ என்று கடும் கோபத்துடன் பதில் கூறியுள்ளார்.  சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதைதான், பவன் கல்யாண் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Related Stories: