உள்ளாட்சி தேர்தலில் நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்: தமிழக அரசு சட்டத்திருத்தம்

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில்  நகர்புறங்களில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்  போட்டியிடலாம் என்று சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்  நடைபெறாமல் உள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச  நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை,  மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் அறிவிப்பை நவம்பர் மாத இறுதியில் வெளியிட்டு  டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்  திட்டமிட்டுள்ளது . இதை  உறுதிப்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின்  பட்டியலை 5 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம்  அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் நகர்புறங்களில் காது கேளாத, வாய்  பேசமுடியாத, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்  என்று சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:ேவட்புமனு தாக்கல் செய்பவர்கள்  காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி  நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரிவு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்  சட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இதேபோன்று தொழு நோயால்  பாதிக்கப்பட்டவர்களும் தகுதி நீக்கத்திற்கு உள்ளாவார்கள் என்று  கூறப்பட்டிருந்தது. சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக  முடிவு செய்தது. அதன்படி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும்  தமிழ்நாடு மாவட்ட மாநகராட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டு  தமிழ்நாடு நகராட்சி நான்காவது சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரவை கூட்டத்  ெதாடரில் நிறைவேற்றப்பட்டது.

 இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையில் இந்த சட்டதிருத்தம்   உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி  தமிழகத்தில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மற்றும் தொழு நோயால்  பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி  தேர்தலில் நகர்புறங்களில் போட்டியிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2 லட்சம் பேர்

தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3 சதவீத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 2 லட்சம் பேர் உள்ளனர்.

Related Stories: