தேர்தலுக்கு முன் சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை: ராஜினாமா செய்த எம்.பி. அரவிந்த் சவந்த் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலுக்கு முன் சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை என்று ராஜினாமா செய்த எம்.பி. அரவிந்த் சவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் அலுவலகத்தில் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்பித்துவிட்டேன். நான் பிரதமரை சந்திக்க நேரம் கோரியிருந்தேன். ஆனால், எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதன்மூலமே இந்த கூட்டணியின் வழிமுறை என்ன என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அமித் ஷா-உத்தவ் தாக்கரே இடையேயான சந்திப்புக்கு பின்னர் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்வதென பாஜகவினர் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அவர்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிட்டனர். அதைவிட மோசமானதாக, அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே, தேர்தலுக்கு முன் சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை. இனி மத்திய அமைச்சராக நான் தொடர்வது தார்மீக ரீதியில் முறையாக இருக்காது என்பதால் பதிவியை ராஜினாமா செய்தேன். நம்பிக்கை என்பது தாக்கரே குடும்பத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் மதிக்கின்றனர், என்றும் அரவிந்த் சவந்த் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, சிவசேனா கட்சியுடன் மகாராஷ்டிர முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்ள பாஜக ஒப்புக்கொண்டதாக சிவசேனா கட்சி கூறியது. ஆனால் அதை பாஜக ஒப்புக்கொள்ளவில்லை.

மாறாக முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு அளிக்க எப்போதும் வாக்குறுதி அளிக்கவில்லை என பாஜக பின்வாங்கியது. இந்நிலையில் ஆட்சி அமைக்க மகாராஷ்டிர ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. சிவசேனா கட்சி முன்வந்த போதிலும் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்கத் தயங்கின. எனினும், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க, பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து வெளியேறினால் மட்டுமே ஆதரவு அளிப்பதாக சிவசேனாவிடம் தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிவசேனா கட்சியின் அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: