சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியத்தின் அதிரடி நடவடிக்கையால் நிலத்தடி நீர்மட்டம் 2.23 மீட்டர் வரை உயர்வு

சென்னை: குடிநீர் வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த 2 மாதங்களில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக  பருவமழை பொய்த்த நிலையில் மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியமும் இணைந்து அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் பலனாக சென்னையில் கடந்த 2 மாதங்களில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் வரை அதிகரித்துள்ளது. அதன்படி மாதவரத்தில் செப்டம்பரில் நிலத்தடி நீர்மட்டம் 6.30 மீட்டரில் இருந்த நிலையில் அக்டோபரில் 1.86 மீட்டராக உயர்ந்து 4.44 மீட்டர் அளவில் தண்ணீர் உள்ளது.

அதேபோல செப்டம்பர் மாதத்தில் அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டம் 7.49 ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் 2.76 மீட்டர் அதிகரித்து 4.73 மீட்டரில் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் செப்டம்பர் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் 7.39 மீட்டரில் இருந்த நிலையில், 1.48 மீட்டர் அதிகரித்து அக்டோபரில் 5.91 மீட்டரிலேயே நீர் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து ஆலந்தூரில் நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பர் மாதத்தில் 7.60 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் 2.48 மீட்டர் உயர்ந்து 5.12 மீட்டராக அதிகரித்துள்ளது. அடையாறில் நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பர் மாதத்தில் 6.32 ஆழத்தில் இருந்தது. அதுவே அடுத்து வந்த அக்டோபரில் நிலத்தடி நீர்மட்டம் 1.57 மீட்டர் உயர்ந்து 4.75 மீட்டராக இருக்கிறது.

Related Stories: