பாரபட்சமற்ற முறையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சேஷன் அனைவருக்கும் தேர்தலில் சம களத்தை ஏற்படுத்தி கொடுத்தார் : ஸ்டாலின் புகழாரம்

சென்னை : முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தி ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலராக திகழ்ந்தவர் டி.என்.சேஷன், அவரது மறைவு செய்தியை கேட்டு தாம் மிகவும் வேதனையுற்றதாக தெரிவித்தார். மேலும் டி.என்.சேஷனின் மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அவர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொண்டார்.சேஷன் இந்தியத்  தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது, தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக கம்பீரமாகத் திகழ்ந்தது என்று அறிக்கையில் குறிப்பிட்ட ஸ்டாலின், பாரபட்சமற்ற முறையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சேஷன் அனைவருக்கும் தேர்தலில் சம களத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாக புகழாரம் சூட்டினார்.

மேலும் ஸ்டாலின் கூறியதாவது, சேஷன் இந்திய ஜனநாயகத்தின் இரு கண்களிலும் என்றைக்கும் ஒளி வீசிக் கொண்டிருப்பார்.நேர்மை, கண்டிப்பு, நடுநிலை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சேஷன். டி.என். சேஷன் அவர்களால் தலைமைத் தேர்தல் ஆணையம், சிறப்பான நம்பகத் தன்மையினை வளர்த்து,அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றது.“சுதந்திரமான, நேர்மையான” தேர்தலை நடத்துவதற்கு, தமது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி, தேர்தல் ஜனநாயகம் என்ற தீபத்தைப் பிரகாசிக்கச் செய்த டி.என்.சேஷன் அவர்கள், இன்றைக்கு நம்மிடையே இல்லை. இது நாட்டிற்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தை விரும்பும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.நாட்டில் கண்ணியம் மிக்க தேர்தல் நடைபெற வேண்டும் என்று கடைசி மூச்சு வரை பாடுபட்ட சேஷன் அவர்களின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேர்தல் ஆணையத்தில் அவரோடு பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று கூறினார்.

Related Stories: