கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் போடாமல் சென்றதற்காக போலீசார் மறித்ததால் பைக்கில் இருந்து விழுந்து பெண் சாவு

* மகன் கண்ணெதிரே பரிதாபம் * உறவினர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மனைவி அய்யம்மாள் (60). இவர்களது மகன் செந்தில் (29). இவர், கள்ளக்குறிச்சி  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். நேற்று மதியம் அய்யம்மாளை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டம் மாளிகைமேடு மேலாகுறிச்சி கிராமத்தில் உள்ள உறவினர்  வீட்டிற்கு செந்தில் சென்றார். காரனூர் கிராமம் வழியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே சென்றனர். அப்போது வாகன தனிக்கையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் பைக்கை திடீரென தடுத்து  நிறுத்தினர். அப்போது, பைக் நிலைதடுமாறவே அய்யம்மாள் தவறி விழுந்துள்ளார்.     இதில் படுகாயமடைந்த அவரை போலீசார், பொதுமக்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை  செய்தபோது அய்யம்மாள் இறந்துவிட்டதாக கூறினர்.

இதனிடையே, வாகன தனிக்கையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சந்தோஷ் தாக்கியதில்தான் அய்யம்மாள் விழுந்து தலையில் அடிபட்டதாக கூறி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அய்யம்மாளின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திரண்டனர்.     பின்னர், ‘‘ஹெல்மெட் போடாமல் சென்ற செந்தில் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்ய முயன்றதே அவரது தாய் தவறி விழுந்து இறந்ததற்கு காரணமாகும். எனவே, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று  மருத்துவமனை எதிரில் மறியலில் ஈடுபட்டனர்.  கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் சமாதானத்தை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

5 போலீசார் இடமாற்றம்: இதுதொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்  வேல்முருகன், எஸ்எஸ்ஐ மணி, தலைமை காவலர்கள் சந்தோஷ்,  செல்வம், இளையராஜா ஆகியோரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு  இடமாற்றம் செய்து  எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார்.

Related Stories: