கோயில் கட்டிடங்களில் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்யாவிட்டால் உடனே வெளியேற்ற நடவடிக்கை: அறநிலையத்துறை எச்சரிக்கை

சென்னை: கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களின் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்யாவிட்டால் ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளது. இந்த வீடு, கடைகளில் வாடகைக்கு வசித்து வருவோர் பல ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்யாமல்  உள்ளனர். இதனால், வாடகையை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை கூறி வருகிறது.  இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி வாடகைதாரர்கள் பெயர் மாற்றம்  செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பை ஒன்றை வெளியிடவும் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி  கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கட்டிடம்/மனைகளில் ஆலய கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டின் படி உள்ள நேரடி வாடகைதாரர்களை தவிர தற்போது அனுபவித்து வரும்  நபர்கள் அதாவது வாடகைதாரர்களின் வாரிசுதாரர்களோஅல்லது மூன்றாம் நபர்களோ அனுபவித்து வருமாயின் அத்தகையோர் கோயிலின் நேரடி வாடகைதாரர்களாக்கிட இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகள் மற்றும் கோயிலின்  நிபந்தனைகள் மற்றும் அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டும் கோயிலின் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கெள்ளப்படுகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பெயர் மாற்றம் செய்து கொள்ளாத நபர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கருதி அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79ன் கீழ் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து  கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: