அயோத்தி தீர்ப்பு, இளம் பெண்கள் விவகாரம்: சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு... சிறப்பு பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பு

திருவனந்தபுரம்: இளம் பெண்களை கோயிலுக்கு அனுமதிக்கும் விவகாரம்,  அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக சபரிமலை கோயிலில் இந்த ஆண்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 16ம் தேதி மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பார்கள். 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் கடந்த மண்டல காலம் முழுவதும் சபரிமலையில் பெரும் பதற்றம் நிலவியது. தரிசனத்திற்கு வந்த இளம் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்ததால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், இந்த மண்டல காலத்திலும் இளம் பெண்கள் தரிசனத்திற்கு வரலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பினரும் சபரிமலை வருவோம் என்று அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இளம் பெண்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவிலும் தீர்ப்பு வரவுள்ளது. இந்த காரணங்களால் இந்த ஆண்டும் சபரிமலையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

* சபரிமலை செல்லும் எல்லா பாதைகளும், வனப்பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலங்களாக்க அறிவிக்கப்படுகிறது.

* அசாதாரண சம்பவங்களை எதிர்கொள்ள போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

* பம்பை முதல் சன்னிதானம் வரையிலான 4.5 கி.மீட்டர் போலீசின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படும்.

* 4 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

* தடுப்பு வேலிகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.

* கமாண்டோ வீரர்கள், அதிவேக அதிரடிப்படையினர் உட்பட 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 700 பெண் போலீசாரும் 48 பெண் கமாண்டோக்களும் இருப்பார்கள்.

* சபரிமலைக்கு புல்மேடு வழியாகவும் ஏராளமா பக்தர்கள் செல்வார்கள். வழக்கமாக இந்த பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த ஆண்டு இந்த பாதையிலும் சிறப்பு பாதுகாப்பு போடப்படும்.

* சமூக இணையதளங்களில் அவதூறு பரப்புவது தடுக்க, செல்போன், இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

* சந்தேகத்திற்குரிய நபர்களை பிடிக்க கடைகள், லாட்ஜ்கள், வியாபார நிறுவனங்களில் போலீசார் அதிரடி சாேதனை நடத்துவார்கள்.

* இலவுங்கல், நிலக்கல், பம்பை, செறியானவட்டம், வலியான வட்டம், சன்னிதானம், பாண்டித்தாவளம், புல்மேடு, உப்புப்பாறை, கோழிக்கானம், சத்ரம் ஆகிய பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக்கப்படும்.

‘பெண்களே வராதீர்கள்’

ஐயப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறுகையில், ‘‘இந்த மண்டல காலத்திலும் சபரிமலைக்கு இளம் பெண்கள் வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, எங்கள் அமைப்பின் சார்பில் வரும் 15ம் தேதிமுதல் பிரார்த்தனை வேள்வி நடத்தப்படும். இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்றோம்,’’ என்றார்.

Related Stories: