ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...200 பக்தர்கள் கோவிலில் தஞ்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை,  பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு சென்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கீழே இறங்கி வந்த போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் வெள்ளம் சீறிப்பாய்ந்த சங்கிலிப் பாறை ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் 50 மேற்பட்ட பக்தர்களை 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.

கோயிலுக்கு சென்ற 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாததால் கோயில் மலைப்பகுதியிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் தினேஷ்குமார் மீட்பு பணிகளில்  துரிதமாக ஈடுபட்டு பக்தர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிலையில், சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: