அயோத்தி வழக்கு கடந்த பாதை

1528அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில், முகலாய மன்னர் பாபரின் உத்தரவுப்படி, அவருடைய தளபதி மிர்பக்கியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1885 மகந்த் ரமகுபிர் தாஸ் என்பவர் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே ராமர் கோயில் விவாதனம் அமைக்க அனுமதி கோரினார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949   பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் மசூதியை மூடி முத்திரையிட்டது.

1950பாபர் மசூதியை வழக்கமான வழிபாடுகளுக்காக திறக்க வேண்டும் என பரிசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிங் விஷாரத் என்பவர் மனு தாக்கல் செய்தார். பின்னர், இதே கோரிக்கையை வலியுறுத்தி பலரும் மனு தாக்கல் செய்தனர்.

1961  பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது என்ற இந்து அமைப்புகளின் வாதத்தை எதிர்த்து உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

1986 பாபர் மசூதியை திறக்கவும், இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்து  பரிசாபாத் மாவட்ட நீதிபதி ஹரி சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதே ஆண்டில் உடனடியாக பாபர்  மசூதி செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.

1989 பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. திரிலோக் நாத் பாண்டே என்பவர் தன்னை ராமரின்  நெருங்கிய நண்பர் எனக் கூறி வழக்கில் தன்னை இணைத்து  கொண்டார்.

1992 டிச. 6: பாஜ தலைவர் அத்வானி தலைமையில் கரசேவை நடத்தப்பட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க லிபரான் ஆணையத்தை 1992ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்  அமைத்தார்.

1993: மசூதி இடிப்பு தொடர்பாக பாஜ மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

1994 அக். 24: இஸ்மாயில் பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசூதியில் தொழுகை நடத்துவதால் மட்டுமே இஸ்லாம் முழுமை  அடைந்து விடாது என தெரிவித்தது.

2000 மே: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றப்பிரிவுகளை சிறப்பு நீதிமன்றம் நீக்கியது.

2003 அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின் கீழே ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை இஸ்லாமிய அமைப்புகள் நிராகரித்தன.

2009 ஜூன்: லிபரான் ஆணையம் தனது அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 68 பேர் மீது குற்றம் சாட்டியது.

2010, செப். 30: அலகாபாத் உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு, பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் ,சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 பகுதிகளை  இந்து அமைப்புகளிடமும், ஒரு பங்கை முஸ்லிம் அமைப்புகளிடமும்  வழங்க உத்தரவிட்டது.

2011 உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்காத வழக்கின் 3 தரப்பும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

2011 மே: அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2016, பிப்.: பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அயோத்தி தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

2017 மார்ச் 21: சுப்பிரமணிய சுவாமியின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காண அறிவுறுத்தியது. அவ்வாறு முன்வந்தால்  மத்தியஸ்தம் செய்யத் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2019 ஜன. 8: உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு தினசரி அடிப்படையில் தொடர்ந்து 40 நாட்கள் விசாரித்து, நேற்று தீர்ப்பு  வழங்கியது.

நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட 2வது வழக்கு

உச்ச நீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கடந்த 69 ஆண்டுகளில் இது பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற 2வது பெரிய  வழக்கு, அயோத்தி நிலம் தொடர்பானதுதான். இது, கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கி, அக்டோபர் 16ம் தேதி வரை 40 நாட்கள் தொடர்ச்சியாக நடந்தது. இதற்கு முன், 1973ம் ஆண்டில் கேசவானந்தா பாரதி வழக்குதான் 68 நாட்கள்  தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டது. அதேபோல், ஆதார் திட்டம் தொடர்பான வழக்கு, 38 நாட்கள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டது. அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட 3வது வழக்கு இதுதான்.

Related Stories: