அரசு பள்ளிக்கு ரூ.7 லட்சத்தில் வகுப்பறை கட்டி கொடுத்த கிராம மக்கள்

மேலூர்: மேலூர் அருகே இடிந்து விழும் நிலையில் இருந்த வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றாக கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் ரூ. 7 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுத்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழையூர்பட்டியில் 1954 முதல் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்போது கட்டிய அந்த பழைய ஓட்டு கட்டிடத்திலேயே மாணவர்கள் உயிர்பயத்துடன் பாடம் படித்து வந்தனர். இந்த சேதமான கட்டித்தில் மர்மநபர்கள் இரவு நேரத்தில் புகுந்து அரசு பள்ளிக்கு வழங்கிய லேப்டாப், டிவியை திருடி சென்ற சம்பவமும்  நடைபெற்றுள்ளது. பாதுகாப்பற்ற இந்த பள்ளி கட்டிடத்திற்கு மாற்றாக அரசு எந்த கட்டிடமும் கட்டி தரவில்லை. இதனால் இந்த கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்கும் இளைஞர்கள் தங்கள் சம்பள பணத்தில் இருந்து ஒரு பகுதியை பள்ளி வளர்ச்சி நிதியாக ஒதுக்கினர். மேலும் கிராம பெரியவர்கள் சிலரும் நிதி வழங்க அந்த பணத்தை சேர்த்து ரூ. 7 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

நேற்று புதிய கட்டிடத்தில் கிராம மக்கள் முன்னிலையில் பால் காய்ச்சி, இனிப்பு மற்றும் உணவு அனைவருக்கும் வழங்கி பள்ளி பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தனியார் பள்ளி மோகத்தில் அனைவரும் அதனை நோக்கி செல்ல, பாழடைந்த கட்டிடம் என்றாலும் அரசு பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கு 1 முதல் 5 வகுப்பு வரை 100 மாணவர்கள் படித்து வந்தனர். மாணவர்கள் மீது இருந்த பற்றுதலே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தங்களை தூண்டியதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர். அனைத்திற்கும் அரசை நம்பி இருக்காமல் கிராம மக்களே தங்கள் தேவைக்காக தங்கள் செலவில் புதிய கட்டிடம் கட்டிய செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related Stories: