பிடிபட்ட பாக்தாதியின் மனைவி ஐஎஸ் ரகசியங்களை வெளியிட்டார்: துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

இஸ்தான்புல்: பிடிபட்ட பாக்தாதி மனைவி, ஐஎஸ் இயக்கம் குறித்த பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்ததாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல்பாக்தாதி கடந்த மாதம் சிரியாவில் அமெரிக்க படைகள் விரட்டி சென்றபோது வெடிகுண்டை வெடிக்க செய்து தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில்  பாக்தாதியின் முதல் மனைவியான ராணியா மகமூத், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி துருக்கியின் ஹட்டாய் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். சிரியா எல்லையையொட்டிய பகுதியில் பாக்தாதியின் மகள் லீலா ஜெபீர் உள்ளிட்ட 10  பேர் ராணியா மகமூத்துடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.   இது தொடர்பாக ஈராக் அரசு வழங்கிய மரபணு மாதிரியை ஒப்பிட்டதில் பிடிபட்டவர்கள் பாக்தாதியின் குடும்பத்தினர்  என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பிடிபட்ட பாக்தாதியின்  மனைவியின் உண்மையான அடையாளத்தை நாங்கள் விரைவாக கண்டறிந்தோம் அப்போது அந்த பெண் தானாக முன்வந்து பாக்தாதி குறித்த தகவல்கள் மற்றும் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை எங்களிடம்  தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன், அங்காராவில் மாணவர்கள் மத்தியில் ேபசுகையில், ‘‘பாக்தாதி குறித்து நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்த தகவலை பிடிபட்ட அந்த பெண் மூலம் உறுதி செய்தோம். தொடர்ந்து பல்வேறு நபர்களை  கைது செய்ததில் அவர்களிடம் இருந்து பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்கள் தான் பாக்தாதியின் மனைவியை கைது செய்தோம். இதை நான் முதல் முறையாக அறிவிக்கிறேன். ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரிய தகவல்  தொடர்பு நெட்வொர்க்கை செயல்படுத்தி வருகிறது. இதையும் தாண்டி பாக்தாதியை கடந்த மாதம் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அதிரடி சோதனை நடத்தி கொன்றோம்’’ என்றார்.

Related Stories: