பெங்களூருவில் 11 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

பெங்களூரு: பெங்களூருவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தை  சேர்ந்த தொழிலதிபர்கள் வருமான வரி செலுத்தாமலும், முறையான ஆவணங்கள் இன்றி தொழில் செய்வதாகவும், வருவாய்க்கு முறையான கணக்கு வைத்து  கொள்ளாமல், பினாமி பேரில் சொத்து குவித்து வருவதாகவும் பெங்களூரு  மற்றும் சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இந்த தகவலை உறுதி செய்த பெங்களூரு வருமான வரித்துறை  அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகம்,  நிறுவனங்களில் சோதனை நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை  பெங்களூருவில் உள்ள வர்த்தூர், ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்பட 11  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாலை 7 மணிக்கு  தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

இதில் கணக்கில் வராத சொத்து  ஆவணங்கள், முறையாக கணக்கு செலுத்தாத ஆவணங்கள், சட்டவிரோதமாக சேர்த்து  வைத்திருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகள், பினாமிகள் சொத்துகள் உள்பட  பல்வேறு ஆவணங்கள், ரொக்கப்பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த  அலுவலகம் அனைத்தும் சென்னையை தலைமையிடமாக கொண்டது. இதில் கைப்பற்றப்பட்ட மொத்த சொத்து விவரங்கள் இன்று  அல்லது நாளை கணக்கிடப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: