டெல்லி போலீஸ் - வழக்கறிஞர்களுக்கு இடையிலான மோதல் : மறுசீராய்வு மனு தள்ளுபடி; போலீஸ் தரப்பிற்கு பெரிய பின்னடைவு

டெல்லி: டெல்லியில் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பான வழக்கில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் போலீஸ் தரப்பிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் மீண்டும் போராட்டத்தில் குதிப்பார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

டெல்லியில் போலீஸ் - வழக்கறிஞர்களுக்கு இடையிலான மோதல்

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமையன்று பார்க்கிங் தகராறு காரணமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீசார், 8 வக்கீல்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது. இந்த பிரச்சனை பெரிதானதால் மறுநாளே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி டி என் பாட்டீல், மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

டெல்லி போலீசார் அனைவர் மனதிலும் பெரும் கொந்தளிப்பு

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும், 2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனே போலீசாருக்கு எதிரான உள்விசாரணையை கமிஷ்னர் தொடங்க வேண்டும். வழக்கறிஞர்கள் மீது இனியும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிபதிகள் கூறினர். இது டெல்லி போலீசார் அனைவர் மனதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வக்கீல்களுக்கு பதிலடியாக, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டெல்லி போலீசார் போலீஸ் தலைமையகம் முன்பாக சாலையில் திரண்டு திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸ் தரப்பிற்கு பெரிய பின்னடைவு

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரிடம், இந்த வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது. இதனால்தான் நேற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்த வழக்கில் மறுசீராய்வு மனு போலீஸ் சார்பாக உள்துறை அமைச்சகம் மூலம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் மனுவில் குறிப்பிட்டது. ஆனால் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான வழக்கில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி டி என் பாட்டீல், மற்றும் நீதிபதி ஹரிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.அப்போது,

வழக்கறிஞர் ராகேஷ் கண்ணா வாதம் : நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாக சில காவல் அதிகாரிகள் மீறி இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

 வழக்கறிஞர் கீர்த்தி உப்பல் : வழக்கறிஞர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு, வழக்கறிஞர்களை நோக்கி சுட்ட காவல் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை டெல்லி காவல்துறை விளக்க வேண்டும்

டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.சி.மித்தல் : தவறிழைத்த காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டால்தான் வழக்கறிஞர்கள் போராட்டம் தணியும்

டெல்லி உயர்நீதிமன்றம் : ஞாயிற்றுக்கிழமை கொடுத்த தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது. அதேபோல் அந்த தீர்ப்பு குறித்த விளக்கத்தையும் அளிக்க முடியாது.

Related Stories: