கர்நாடகா ஆட்சி கவிழ்ப்பில் அமித் ஷாவுக்கு தொடர்பு காங். வழங்கிய ஆடியோ ஆதாரம் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு ஏற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, அமித் ஷா மேற்பார்வையில் நடந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, இக்கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், கொறடா உத்தரவை மீறினர். இதனால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்களின் பதவியை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் பறித்தார். மேலும், இவர்கள் அனைவரும் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணா முராரே அமர்வு, கடந் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

காங்கிரஸ் புது மனு: இவ்வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், கடந்த வாரம் ஹுப்பள்ளியில் நடந்த பாஜ தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஆடியோ சிடி ஒன்று வெளியானது. அதில், மஜத - கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்கள் பதவி விலகல் விவகாரம், பாஜ தேசிய தலைவர் அமித் ஷா மேற்பார்வையில் நடந்ததாக எடியூரப்பா பேசி இருக்கிறார். இது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, எடியூரப்பாவின் இந்த பேச்சு அடங்கிய ஆடியோவை  உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அதை பெற்றுக் கொண்ட நீதிபதிகள், தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆடியோ ஆதாரத்தை தீர்ப்பின் போது பரிசீலனைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், விசாரணை ஒத்திவைத்தனர்.

செல்போன் கொண்டுவர தடை

பாஜ தேர்தல் குழு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசிய பேச்சு குறித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் நேற்று காலை பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்வர் எடியூரப்பா சொந்த வீடு உள்பட மாநகரில் உள்ள அரசு இல்லம், பேரவையில் உள்ள அறை ஆகிய பகுதியில் திடீரென அறிவிப்பு பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல்வரை சந்திக்க வரும் அமைச்சர்கள், பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் செல்போன் கொண்டுவரக்கூடாது. அப்படி கொண்டு வந்தாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். முதல்வரை சந்தித்த பின் மீ்ண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.  இதனிடையில் முதல்வர் வீடு உள்ளிட்ட அவர் தங்கும் பகுதியில் செல்போன்கள் இயங்காத வகையில் ஜாமர் கருவிகள் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பாஜ.வுக்கு மஜத ஆதரவு தேவகவுடா அறிவிப்பு

‘கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடப்பதை விரும்பவில்லை,’ என்று சில தினங்களுக்கு முன் கூறிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜ அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதை ஏற்க மறுத்த மஜத மூத்த தலைவர்கள், ‘தேவகவுடா சொன்னால் மட்டுமே ஏற்போம்’ என அறிவித்தனர். இந்நிலையில், முதல்வர் எடியூப்பாவிடம் நேற்று போன் மூலம் பேசிய தேவகவுடா, அவருடைய ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவரிடம், ‘எங்கள் கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா சதி செய்தது பற்றி,  இப்போதுதான் எங்களுக்கு தெரிந்துள்ளது. மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்காக அவர் அரசியல் நாடகம் ஆடியுள்ளார். நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. 224 தொகுதியில் நிறுத்துவதற்கு மஜத.வில் வேட்பாளர்கள் கிடையாது. எனவே, இடைத்தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், பாஜ அரசுக்கு ஆதரவு அளிப்போம்,’ என தேவகவுடா கூறியதாக மஜத வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: