ஜிஎஸ்டியில் 450 கோடி மோசடி ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 5வது நாளாக ஐ.டி. சோதனை : முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை

ஈரோடு: ஜிஎஸ்டியில் 450 கோடி மோசடியில் ஈடுபட்டதாக ஈரோடு அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரும், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினரும் இணைந்து 5ம் நாளாக  சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் அரசின் பல கட்டுமான திட்டங்களை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரசு பணிகளுக்கு செய்யப்பட்ட கட்டுமான பணிகளுக்கு எவ்வித பணியையும் செய்யாமல், போலி ரசீதுகளை கொடுத்து, ஜிஎஸ்டியில் மோசடி செய்து வந்ததை ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், கட்டிடங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், எந்த சேவையும் அளிக்காமல் போலி ரசீதுகளை தயாரித்து, 450 கோடிக்கு ஜிஎஸ்டியில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உரிமையாளர் அசோக்குமாரை (45) ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். இருப்பினும், ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம், பெருந்துறையில் உள்ள அசோக்குமாரின் வீடு ஆகியவற்றில் கடந்த 1ம் தேதியில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் தமிழக ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினரும், விசாகப்பட்டினம் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினரும் விடிய விடிய சோதனை நடத்தினர். நேற்று 5ம் நாளாக சோதனை நடந்தது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: