பரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழக அரசு சம்மதம்: கேரள சட்டப்பேரவையில் தகவல்

திருவனந்தபுரம்: பரம்பிக்குளம் -  ஆழியார் நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழக அரசு சம்மதித்துள்ளதாக  கேரள முதல்வர் பினராய் விஜயன் சட்டசபையில் நேற்று கூறினார்.  கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஜனதாதள உறுப்பினர் மேத்யூ டி.தாமஸ் கேள்வி எழுப்பினார். அப்போது, சமீபத்தில் கேரள - தமிழக முதல்வர்கள் இடையே நடந்த இரு மாநில  நதி நீர் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது  என்பது குறித்து விளக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர் பினராய்  விஜயன் கூறியதாவது:  கடந்த செப்டம்பர் 25ம் தேதி திருவனந்தபரத்தில் கேரள -  தமிழக மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் பிரச்னைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது. இதில், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்னை  குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பரம்பிக்குளம் - ஆழியார் நதிநீர்  ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழக அரசு சம்மதித்துள்ளது. இரு மாநில தலைமை  செயலாளர்கள் தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட  குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை  இரு மாநில தலைமை செயலாளர்கள் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில்  பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

Related Stories: