பொருளாதார பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்

புதுடெல்லி: பொருளாதார பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். பா.ஜ அரசின் தோல்விகளை எடுத்து கூறும் வகையில் இன்று முதல் 15ம் தேதி வரை போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தாய்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில்(ஆர்சிஇபி) கையெழுத்திட இந்தியா முடிவு செய்தள்ளது. இதன் காரணமாக ஆசியான் நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகம் நடைபெறும். ஆனால் இந்த ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்துக்கு மரண அடியாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொருளாதார பிரச்னைகள் குறித்து டெல்லியில் ஆலோசிக்க எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் அழைப்பு விடுத்திருந்தார். இதில் காங்கிஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், ரந்தீப் சுர்ஜிவாலா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நதீப் உல் ஹக், திமுக சார்பில் டி.ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்ைல. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பது, ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முடிவு ஆகியை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பொருளாதார பிரச்னையை எப்படி எழுப்புவது என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றை வலியுறுத்தி இன்று முதல் 15ம் தேதி வரை போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Related Stories: