கேரள வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் பலி பெண் மாவோயிஸ்ட் முகம் சிதைப்பால் அடையாளம் காண்பதில் சிக்கல்

கோவை: கேரள வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண் மாவோயிஸ்ட் முகம் கல்லால் சிதைக்கப்பட்டுள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 28ம் தேதி தண்டர் போல்ட் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் குழு ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் (50), புதுக்ேகாட்டை கார்த்திக் (35), கர்நாடகா மாநிலம் சிருங்கேரியை சேர்ந்த ஸ்ரீமதி (27), சித்த மங்கலம் சுரேஷ் (30) ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரின் சடலங்களும் திருச்சூர் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கியால் சுடப்பட்ட  ஸ்ரீமதியின் உடலில் குண்டு இருந்தது. முகம் கல்லால் சிதைத்து மறைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் முகத்தை சிதைத்து ஏன்?, யார் சிதைத்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்ரீமதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை எங்கே போனது என்பது மர்மமாக இருக்கிறது. ஸ்ரீமதியின் போட்டோவை வைத்து கர்நாடகா போலீசாரை வரவழைத்து தண்டர்போல்ட் போலீசார் விசாரித்தனர். ஆனால் முகம் சிதைந்திருந்ததால் போலீசார் அடையாளம் காட்டவில்லை. ஸ்ரீமதியின் உறவினர்கள், பெற்றோர் வராததால் முழுமையான விவரங்களை கண்டறிய முடியவில்லை. துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் ஸ்ரீமதிதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தால் மட்டுேம இறந்த பெண் குறித்த விவரம் தெரியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மஞ்சகண்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், ஆண்கள் 3 பேர்தான் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றினர். இறந்த பெண், இவர்களுக்கு ஓட்டலில் இருந்து அடிக்கடி சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துள்ளதாக கூறினர். ஆனால் அந்த பெண் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அல்ல என்ற தகவலும் வௌியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக், சுரேஷ் உள்ளிட்டோரின் முகமும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. நேற்று வரை 4 பேரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. முழுமையான விசாரணை முடிந்த பிறகே சடலங்கள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த ஊரில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட்டான இவர், கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் உடலை, சொந்த ஊரான ராமமூர்த்திநகரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, ராமமூர்த்தி நகர் கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மணிவாசகத்தின் மனைவி, தங்கை, அவரது கணவர் ஆகியோரும் தீவிரவாத இயக்கத்தில் உள்ளனர். எனவே அவரது உடலை இங்கு அடக்கம் செய்தால் வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் அடிக்கடி தீவிரவாத இயக்கத்தினர் ஊருக்குள் வந்து செல்ல வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இங்கு மணிவாசகத்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது,” என்றனர்.

Related Stories: