திருவள்ளுவருக்கு கிருஸ்தவர்கள் சிலுவை போட்டாலும் எனக்கு பிரச்னை இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

மதுரை: நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி  வெளியிட்டார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் உள்ளவாறு அமைத்து சமூக  வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் தாய்லாந்தில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று  இருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேட்டிளித்த  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கீழடி அகழாய்வு விபரம் கதையாக்கமாக வர உள்ளது. ஓராண்டில்  அருங்காட்சியாக பணிகள் நிறைவு பெறும். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் பார்வையிடும் பகுதியாக தமிழ் சங்கம் இருக்கும். மத்திய தொல்லியல்  துறை நமக்கு எதிரானவர்கள் இல்லை. அவர்கள் அகழாய்வில் எடுத்த பொருட்களை நம்மிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளனர் என்றார். தமிழன்னை  சிலையை எந்த உலோகத்தில் வைப்பது என்கிற குழப்பம் நிலவுகிறது. விரைவில் ஒரு முடிவு எட்டப்பட்டு சிலை வரும் என்றார்.

மத்திய அரசு நடத்திய முதல் இரண்டு அகழாய்வு முடிவுகள் கிடைத்துள்ளது. அதன் முடிவுகள் விரைவில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.  ஜனவரியில் கீழடியை ஒட்டிய நான்கு கிராமங்களில் அகழாய்வு துவங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, திருவள்ளுவரின் காவி உடை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், சமண துறவி போல திருவள்ளுவர் ஆடை  உள்ளது. லார்ட் எல்லீஸ் நாணயங்களில் உள்ள படத்தை ஆய்வு செய்த பிறகு தான் இதை உறுதி செய்ய முடியும். திருவள்ளுவர் இந்து துறவியா  என்பதற்கு ஆதாரம் இல்லை, ஆய்வு செய்தப்பின்னர் தான் தெரிவிக்க முடியும் என்றார். திருவள்ளுவர் உலக பொதுமறையை இயக்கியுள்ளார். அவர்  பொதுவானவர். இந்துக்கள் விபூதி வேண்டுமானால் புசிக்கலாம், திருவள்ளுவருக்கு சிலுவை போட்டாலும் எனக்கு பிரச்னை இல்லை” என்று  தெரிவித்தார்.

திருவள்ளுவரின் காவி உடை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில குறிப்புகளையும் அமைச்சர் பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார். அதில்,  வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த  தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக  இருக்க வாய்ப்பே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையிலே இந்த நாணயத்தின் பின்புலத்தினை நம் ஆவணக்காப்பகம் மூலமும், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மூலமும் கண்டறிய முயற்சி  செய்கிறேன்! ஆனால், திருவள்ளுவரை அனைவருக்கும் (இந்துக்கள், கிறுத்துவர்கள், இஸ்லாமியர் உட்பட) தம்மவராக உருவகப்படுத்த உரிமை உண்டு  ! எந்த IPRம் இதைத்தடுக்க இயலாது! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: