நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: திருப்பத்தூர் மருத்துவக்கல்லூரி மாணவனின் தந்தைக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான திருப்பத்தூர் மருத்துவக்கல்லூரி மாணவனின் தந்தை முகமது ஷாபியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் திருப்பத்தூரை சேர்ந்த மருத்துவ மாணவன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தபோது, அவருடைய தந்தையின் ஜாமின் மனுவையும் இங்கேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூர் மருத்துவக்கல்லூரி மாணவனின் தந்தை ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 2ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. மேலும் தாம் எந்தவித முறைகேட்டில் ஈடுபடவில்லை.

மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு நடந்தபோது அவரது மகன் மொரிஸியஸில் இருந்ததால் நீட் தேர்வில் முறைகேடு செய்தது உண்மை என்று வாதிட்டார். மேலும், மாணவனின் தந்தை முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தந்தையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில் மாணவர்கள் 5 (4 மாணவர்கள் + ஒரு மாணவி) பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவர்களின் பெற்றோர்கள் 5  பேரின் (4 தந்தை மற்றும் ஒரு தாய்) ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: