திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் ஸ்டாலின் பேட்டி

சென்னை: தஞ்சாவூரை அடுத்து வல்லம் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில், அதிகாலை 5 மணியளவில் பஞ்சாயத்து யூனியன் அலுவகத்தில் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள் 10க்கும் மேற்பட்டோர் சாணி மற்றும் கருப்புத்துணிகளால் அவமதித்துள்ளனர். நேற்று பாங்காங் தலைநகரில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் உள்ளவாறு அமைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் தாய்லாந்தில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று இருந்தது.

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை தேவை. திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

இதனிடையே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகளும், கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: