புதுடெல்லி: ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு உயிர் காக்கும் உபகரணம் மற்றும் வெப்ப கட்டுப்பாட்டுக் கருவி என 2 முக்கிய கருவிகளை வழங்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இத்திட்டம் ரூ.10,000 கோடியில் வரும் 2021ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், ககன்யான் திட்டம் தொடர்பாக கடந்த வாரம் இந்தியா, ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.இதன்படி, ககன்யான் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களுக்கான உயிர் காக்கும் உபகரணங்களையும், ககன்யான் விண்கலத்தின் வெப்ப கட்டுப்பாட்டு கருவியையும் ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோசின் துணை நிறுவனமான கிளவ்கோஸ்மோசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உயிர்காக்கும் உபகரணமானது, விண்வெளியில் வீரர்களுக்கு காற்று, தண்ணீர், உணவு, உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருத்தல் மற்றும் மனித உடலிருந்து கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுகிறது. வெப்ப கட்டுப்பாட்டு கருவியானது, அனைத்து நிலைகளிலும் விண்கலத்தின் வெப்பநிலை அதிகமடையாமல் பாதுகாக்கிறது. அதிக வெப்பமடைந்தால் விண்கலம் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது.