ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ15 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 1 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று மடக்கிய போலீசார்

சென்னை: ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் 6 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைசாவடி பகுதி வழியாக ஆந்திராவில் இருந்து வரும் பஸ், கார், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை நோக்கி வந்த ஒரு காரை போலீசார் மடக்கி நிறுத்தனர். அந்த காரை சோதனை செய்ய முயன்றபோது, டிரைவர் திடீரென காரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பினார். உடனே போலீசார் அந்த காரை சுமார் ஒரு கிமீ தூரம் விரட்டி சென்றனர். இதனால் பயந்துபோன அந்த காரின் டிரைவர், மற்றொரு வாகனத்தின் மீது மோதினார். இதில் டிரைவர் காருக்குள் சிக்கினார். பின்னர் அந்த காரை சோதனை செய்தபோது, பின்சீட்டில் ரூ15 லட்சம் மதிப்புள்ள சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் சோழவரத்தை சேர்ந்த சாமுவேல் (25) என தெரியவந்தது. பிடிபட்ட செம்மரக் கட்டை மற்றும் காரை மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். பிடிபட்ட சாமுவேலை கைது செய்து, செம்மரக் கட்டை கடத்தலில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா கடத்திய தம்பதி கைது

எளாவூர் சோதனைசாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்தை சோதனை செய்தனர். அதில், 2 சூட்கேசில் சுமார் 20 கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுசம்மந்தமாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: