முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பவானிசாகர் அணை: ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

ஈரோடு: பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீர்மட்டம் 102 அடியை தொட்டது.

அக்டோபர் மாத இறுதி வரை அணையில் 102 அடி வரை மட்டும் நீர் இருப்பு வைக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 105 அடி வரை நீர்தேக்கலாம் என்பதால் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 102 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32.1 டிஎம்சி, நீர்வரத்து 6,076 கன‌அடி, 2,600 கனஅடி வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனிடையே பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிக்கு செல்லவும், ஆற்றில் குளிப்பதோ, பரிசில் இயக்குவதோ கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: