வெளிமாநிலத்தவர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் தங்கினால் அரசிடம் அனுமதி பெற வேண்டும்: மேகாலயாவில் அவசர சட்டம் அமல்

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தை சேராதவர்கள், மாநிலத்தின் உள்ளே 24 மணி நேரத்திற்கு மேல் தங்கினால், முதலில் அரசிடம் பதிவு  செய்ய வேண்டும் என்ற அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டம் உடனே   அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டம் 2016-ல் திருத்தம் கொண்டு வந்துள்ள மாநில அரசு, சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க சில புதிய பிரிவுகளை சேர்த்துள்ளது. இதன்படி, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்,   மேகாலயா மாநிலத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்கினால்,முன்னரே அனுமதி வாங்க வேண்டும் என அம்மாநிலம் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என அந்த சட்டத்தில்  கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர் டைசங் கூறுகையில், இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. சட்டசபை கூடும் போது, அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories: