திருச்சி பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை என தகவல்: போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சி  திருவெறும்பூரில் பெல் நிறுவன வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் 1.50 கோடி ரூபாய் கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி காசாளர் ரவீந்திரன் சூட்கேஸில் இருந்து பணம் மாயமானதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி திருவெறும்பூரில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டு நிறுவனமான இந்நிறுவனத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவன வளாகத்திற்குள் பெல் நிறுவன கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வங்கியில் கொள்ளையானது நடைபெற்று இருக்கிறது.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் காசாளர் ரவீந்திரன் என்பவர் வங்கியின் பணம் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை லாக்கரில் வைக்காமல் பூட்டப்படாத தன்னுடைய சூட்கேஸில் வைத்துவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து வங்கியானது மாலையளவில் மூடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வங்கியின் ஜன்னல் வழியாக நுழைந்த மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் லாக்கரினை உடைக்காமல் சரியாக சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையாக ரூபாய் 1.1 கோடி பணத்தை லாக்கரில் வைக்காமல் தன்னுடைய பூட்டப்படாத சூட்கேஸில் வைத்தது ஏன்? என்று காசாளர் ரவீந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் எவ்வளவு நாட்களாக இதுபோன்ற பழக்கத்தை காசாளர்  பின்பற்றி வருகிறார் எனவும், வங்கி கொள்ளைக்கும், அவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை பொறுத்தவரையில் இந்த வருடம் ஆரம்பத்தின் முதலே வங்கி கொள்ளைகள் அதிகளவில் நடைபெற்றள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சக ஆட்கள் இதிலும் ஈடுபட்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து திருச்சியில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: