இடிந்து விழும் அபாய நிலையில் குறிச்சி அங்கன்வாடி மையம்

கோவை: கோவை குறிச்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் மாவட்ட சமூகநலத்துறை மற்றும் சத்துணவுத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில், 1 முதல் 5 வயது வரையிலான சுமார் 6 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இந்த மையம் காலை 8.30 மணி முதல் 4 மணி வரை செயல்படும். இதில், மதியம் 12.15 மணி முதல் 1 மணி வரை சாப்பிடவும், சாப்பிட்டவுடன் குழந்தைகள் மாலை 3 மணி வரை தூங்கி ஓய்வு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

இதில், பெரும்பாலான அங்கன்வாடி மையங்களின் கட்டிடங்கள் அபாய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை குறிச்சி பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மைய கட்டிடத்தில் மேற்கூரை கூலிங் ஷீட் போடப்பட்டுள்ளது. இதன் அருகே பெரிய அளவிலான மரம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மரம் சாய்ந்து கட்டிடத்தின் மேல் விழுந்துள்ளது. இதனால், கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, எந்த நேரமும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அங்கன்வாடி மையத்தின் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாய நிலையும் இருக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி பெரிய அளவிலான அசம்பாவிதம் நடப்பதற்குள் மரத்தை அகற்ற வேண்டும் எனவும், மழைநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: