கடந்த நிதியாண்டில் பெரும் நஷ்டம்: மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் குமறல்

வாஷிங்டன்: மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டும் கடந்த நிதியாண்டில்(2018-2019) நஷ்டம் அடைந்ததாக தெரிவித்துள்ளன. 2018-19-ம் நிதியாண்டில், அமேசான் இந்தியா நிறுவனத்திற்கு 5 ஆயிரத்து 685 கோடி  ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பை விட கடந்த நிதியாண்டில் 9.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், மற்றொரு பெரிய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டும் கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 836 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் அறிவித்திருந்த விழாக்கால  சலுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனை அதிகரித்ததாக அவ்விரு நிறுவனங்களும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு காலாண்டில் அமேசான் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தையில் அமேசானின் சொத்து மதிப்பு சில மணி நேரத்தில் 7 சதவீதம் வரை சரிந்தது. இந்த சரிவினால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. இதன் காரணமாக ஜெப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற பெருமையை இழந்துள்ளார். மைக்ரோசாப்ட்  நிறுவனர் பில்கேட்ஸ் 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஜெப் பெசோஸ் வைத்துள்ள சொத்தின் இந்திய மதிப்பு சுமார் 7லட்சத்து 37 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஆகும் . பில்கேட்ஸின்  சொத்துமதிப்பு 7லட்சத்து 49 ஆயிரத்து 801 கோடியாக உள்ளது.

Related Stories: