பிலிப்பைன்சில் பூகம்பம்: இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி

மணிலா: தெற்கு பிலிப்பைன்சில் நேற்று காலை 6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள தாவோ நகரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. பலஅடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டன. வீடுகள், கடைகள், பள்ளிக் கூடங்கள் சேதமடைந்தன. இந்த பூகம்பம் ஒரு நிமிடம் நீடித்தது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதில் ஒன்று ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக இருந்தது. பூகம்பத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மின்டானோவில் விடுமுறை முடிந்து நேற்றுதான் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

பூகம்பம் காரணமாக அனைவரும் பீதி அடைந்தனர். இந்த பூகம்பத்தில் 6 பேர் பலியாயினர். மக்சேசேவில் பள்ளியில் இருந்து வெளியேற முயன்ற மாணவன் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்காக ஓடியதில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் காயமடைந்தனர். கோரோநடால் நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் 66வயது முதியவர் உயிரிழந்தார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். துலுனானில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், அதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சக்தி வாய்ந்த பூகம்பத்தால் மின்சாரம், தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதியும் இங்கு பூகம்பம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.

இமாச்சலில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் நேற்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 11.31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. சம்பா மாவட்டத்தின் வட கிழக்கே 5 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் உருவாகி இருந்தது. மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் இது உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடி தகவல் இல்லை.

Related Stories: