அரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் மீண்டும் பதவி ஏற்பு: துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா

சண்டிகர்: அரியானாவில் பாஜ கூட்டணி அரசு அமைந்துள்ளதால், முதல்வராக மனோகர் லால் கட்டார் 2வது முறையாக பதவியேற்றார். பா.ஜ கூட்டணியில் சேர்ந்த ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக  பதவிேயற்றார். மற்ற அமைச்சர்கள் இன்னும் சில நாளில் பதவி ஏற்கவுள்ளனர். அரியானா சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜவுக்கு 40  எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  இதேபோல் சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  அரியானா லோகித் கட்சியின் தலைவரான கோபால் கந்தா ஆதரவு தெரிவித்தும், அதனை பா.ஜ ஏற்கவில்லை.

இந்நிலையில் சண்டிகரில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜ சட்டப்பேரவை கட்சி தலைவராக மனோகர் லால் கட்டார் ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற மனோகர் லால் கட்டார், ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார். கட்டாருக்கு சுயேட்சை எம்எல்ஏக்கள்  7 பேர் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.57 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதை அடுத்து ஆளுநர் சத்யாதியோ நரேன் ஆர்யா ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அரியானா முதல்வராக மனோகர்  லால் கட்டார் (65), 2வது முறையாக பதவி ஏற்றார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்றுக்கொண்டார். கூட்டணி ஆட்சி என்பதால் மற்ற அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டபின்  இன்னும் சில நாளில் பதவி ஏற்கவுள்ளனர்.

Related Stories: