ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை: 18 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 18 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர்.

சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைக்கு சுவாசிக்க தொடர்ச்சியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த கயிறு கட்டி குழந்தை இழுக்க முயற்சி செய்யும் போது அது தோல்வியில் முடிந்தது.

துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டது. இந்நிலையில் சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மணலால் மூடப்பட்ட நிலையில் ஆழ்துளை கிணற்றில் அசைவின்றி குழந்தை சுர்ஜித் இருக்கிறான். இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.

மீண்டு வா சுஜித்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக்கோரி ட்விட்டரில் #SaveSujith என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்கக்கோரி பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லேசான மழை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில் லேசான மழை பெய்து வருகிறது. ஆழ்துளை கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க தார்ப்பாயை கொண்டு மூடி தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: