தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாமூல் வசூலித்த வட சென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

சென்னை: தீபாவளி வசூலில் ஈடுபட்ட வட சென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களான வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் சார்பில் பணம், பரிசு பொருட்கள் மற்றும் துணிகள் அன்பளிப்பாக வழங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், வட சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது. அப்போது பட்டாசு கடைகள் அனுமதி அளிக்க மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணன் ஒவ்வொரு கடைக்கும் அனுமதி வழங்க ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமான வாங்கி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  

அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணன் அறையில் கணக்கில் வராத ₹1.60 லட்சம் பணம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு பெட்டிகள், இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  தொடர் சோதனையில் ராஜேஷ் கண்ணன் அறையில் பட்டியல் ஒன்று சிக்கியது. அந்த பட்டியலில் வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கும் குறிப்பிட்ட தொகை  பட்டாசு கடைகளில் வசூலித்து அளிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் பல கட்டிடங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாக அனுமதி அளித்திருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து, அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேஷ் கண்ணனிடம் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், ராஜேஷ் கண்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 102ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி தீயணைப்புத்துறை இயக்குநர் காந்திராஜன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர். இதனால் அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: