பந்திப்பூர் அருகே அட்டகாசம் செய்த காட்டு யானை கும்கிகள் மூலம் பிடிக்கப்பட்டது

கூடலூர்: நீலகிரி எல்லையில் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த குரோபர் என்ற யானையை கும்கி யானைகள் உதவியுடன் கர்நாடக மாநில வனத்துறையினர் பிடித்து முகாமில் அடைத்தனர். தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கதிரேப்பள்ளி, பேராண்டப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரோபர், மார்க் என்ற பெயரிடப்பட்ட இரண்டு காட்டு யானைகள், விவசாய நிலங்களை துவம்சம் செய்து வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த 2 காட்டு யானைகளால் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக வனத்துறையினர் 2 யானைகளையும் பிடிக்க திட்டமிட்டனர்.

இதில் குரோபர் யானை மட்டும் சிக்கியது. அதை கடந்த ஆகஸ்ட் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவித்தனர். முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள் சுற்றித்திரிந்த இந்த யானை கடந்த சில நாட்களாக முதுமலையை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட லிங்கவாடி பகுதியில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை துவம்சம் செய்தது.

கடந்த இரு நாட்களுக்கு முன் பந்திப்பூர் அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த குரோபர் யானை, செல்பி எடுக்க முயன்ற இருவரை தாக்கியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினமும் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த யானையை பிடிக்க கர்நாடக வனத்துறையினர் திட்டமிட்டனர். அவர்கள் நேற்று 5 கும்கி யானைகள் உதவியுடன் குரோபர் யானையை சுற்றி வளைத்து, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை கர்நாடகா மாநிலம் மடிக்கேரி அடுத்துள்ள துபாரே யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று, அங்குள்ள அங்கு கிரால் என்ற கூண்டில் அடைத்தனர். வரும் நாட்களில் இந்தா யானை கும்கி யானையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: