துளித் துளியாய்

* ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அனுபவ வீரர் எம்.எஸ்.டோனியின் எதிர்காலம் குறித்து அவர் இதுவரை என்னிடம் எதுவும் பேசவில்லை. அதற்கான நேரம் வரும்போது நேரில் சந்தித்து பேசுவேன்’ என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

* பிசிசிஐ வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதில் சவுரவ் கங்குலி உட்பட புதிய நிர்வாகிகள் அனைவரும் முறைப்படி பொறுப்பேற்க உள்ளனர். செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, பொருளாளராக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூரின் இளைய சகோதரர் அருண் துமால் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

* ‘இந்திய அணி தற்போதுள்ள பார்மில் எத்தகைய சவாலுக்கும் தயாராக உள்ளது. ஆடுகளம் எப்படி உள்ளது என்ற கவலையே எங்களுக்கு இல்லை. எங்கள் பவுலர்கள் 20 விக்கெட்டையும் வீழ்த்தக் கூடியவர்களாக இருக்கும்போது, அணி பெராரி காரைப் போல சீறிப் பாயும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

* இந்திய அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் வங்கதேச அணி கடும் நெருக்கடி கொடுக்கும் என்று முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லஷ்மண் கணித்துள்ளார்.

* தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தொடக்க வீரராகக் களமிறங்கி தொடர் நாயகன் விருது பெற்றதற்கு கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆதரவும் ஊக்கமுமே காரணம் என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

* விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ‘கூடுதலாக ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது’ என்று யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் இருவரும் தெரிவித்துள்ளனர்.

* ராஞ்சி டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரோகித்  சர்மா 212 ரன் விளாசினார். தென் ஆப்ரிக்கா  முதல் இன்னிங்சில் 162 ரன், 2வது இன்னிங்சில் 133 ரன் மட்டுமே எடுத்தது. இப்படி ஒரு இந்திய பேட்ஸ்மேன் எடுத்த ரன்னை விட எதிரணிகள் குறைவான ஸ்கோரில் ஆல் அவுட்டான சம்பவம் இதற்கு முன்பு 4 முறை நடந்துள்ளது.

* சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரில் தனது 1500வது ஏடிபி டூர் போட்டியில் விளையாடிய உள்ளூர் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்க்ஸிக்கை மிக எளிதாக வீழ்த்தினார்.

* ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் பார்சிலோனா, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ், மான்செஸ்டர் சிட்டி உட்பட முன்னணி அணிகள் பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்புகிறது.

Related Stories: