செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாக்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி முதல் கார் வரை அனைத்திலும் பேட்டரி பயன்பாடு உள்ளது. இத்தகைய பேட்டரிகள், மின்னணு சாதனங்களின் ஆற்றல் சேமிப்பு கலனாக இருக்கின்றன. செல்லிடப்பேசிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களாக உள்ளதால், செல்லிடப்பேசிகள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வருகின்றன.