ஓசூர் வனப்பகுதியில் 9 யானைகள் மீண்டும் முகாம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை  வனப்பகுதியில் இருந்து விரப்பட்ட யானைகள் ஓசூர் வனப்பகுதிக்கு  வந்துள்ளதால், சானமாவு வனத்தை சுற்றி உள்ள பீர்ஜேப்பளி, பாத்தகோட்டா,  ஆழியாளம், ராமாபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம்  பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள்,  ஜவளகிரி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட சூரப்பன் குட்டை  வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அங்கிருந்த யானைகளை வனத்துறையினர்  விரட்டியடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து  வெளியேறிய யானை கூட்டம், நேற்று அதிகாலை ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட  சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறையினர்  கூறுகையில், ‘ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட போடூர்பள்ளம் காட்டில், தற்போது 2  யானைகள் உள்ளன. இந்நிலையில், சானமாவு காட்டிற்கு 9க்கும் மேற்பட்ட யானைகள்  வந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே,  சானமாவு வனத்தை சுற்றி உள்ள பீர்ஜேப்பளி, பாத்தகோட்டா, ஆழியாளம்,  ராமாபுரம், சுற்று வட்டார கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கும், வனப்பகுதிக்குள்ளும்  ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம்,’ என்றனர்.

Related Stories: