திருப்பூர் அருகே மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்த பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடிப்பதா?: பெட்ரோலியம் நிறுவனம் மீது கலெக்டரிடம் புகார் மனு

திருப்பூர்: திருப்பூர் கண்டியன் கோவில் அருகே மேற்கூரை இல்லா குளியலறை பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க  கோரி கருப்பு பேட்ஜ் அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.இது குறித்து, கண்டியன் கோவில் பகுதி பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் கிராமம் பகுதியில் சுமார் 1000 குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, மேற்கூரை இல்லாத குளியலறைகள்தான் பெரும்பாலும் உள்ளன. இப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 14ம் தேதி பாரத்  பெட்ரோலிய நிறுவனம் சில நபர்களை வைத்து ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எங்கள் பகுதியை படம் பிடித்தது.

அதில் மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் விளைநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களின் படங்களும் இடம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தனிப்பட்ட  உரிமையை மீறிய செயல் ஆகும். மேலும் இது ஒரு தண்டனைக்குரிய குற்றம். பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த செயல் பெண்களின் மானத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது எங்களுடைய மானத்தோடு விளையாடிய செயல். இதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தாங்கள் சட்ட விரோதமாக படம் பிடிக்க  உத்தரவிட்ட அதிகாரி மற்றும் படம் பிடித்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>