பஞ்சமி நிலம் குறித்து வாய் திறக்காத ராமதாஸ் அசுரன் படம் வந்தபிறகு திமுகவை சீண்டுகிறார்: திருமாவளவன் பேச்சு

சென்னை: பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட  ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் 25ம் ஆண்டு நினைவு தூண் திறப்பு விழா பொதுக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாமல்லபுரம் காரணை கிராமத்தில்  நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது.நெல்லையில் நடந்த மண்ணுரிமை மாநாட்டில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் கண்டறிந்து, மீட்பதற்கு ஒரு ஆணையம்  அமைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.அப்போது பேசிய கலைஞர், இதற்கு உரிய முடிவு எடுப்பேன் என உறுதியளித்திருந்தார். அதன் பிறகு மறைமலைநகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் மீண்டும் கருணாநிதியை அழைத்து சிறப்பு செய்தேன். அந்த விழாவிலும் பஞ்சமி நில  கோரிக்கையை எழுப்பினேன். அதன்படி ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த ஆணையத்தை செயலிழக்க செய்து விட்டார்.

இப்போது அரசியல் காரணங்களுக்காக ராமதாஸ் டிவிட்டர் பக்கத்திலே பதிவு செய்ய கூடிய நிலை. அதற்கு காரணம் அசுரன் திரைப்படம். அந்த படத்தை நானும் பார்த்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பார்த்தார். நான் டிவிட்டர்  பக்கத்திலே அதைப்பற்றி எழுதவில்லை. திமுக தலைவர் பாராட்டி எழுதி இருந்தார். அதை பொறுத்து கொள்ள முடியாத பாமக நிறுவனர், முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலம் என திமுகவை சீண்டி வம்புக்கு இழுத்தார்.உடனே முரசொலி இருக்கும் கட்டிடம் பட்டா நிலம். யாரிடம் வாங்கினோம் என்று எங்களிடம் ஆவணம் இருக்கிறது. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்து விட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்காவிட்டால்  நீங்கள் அரசியலில் இருந்து விலக தயாரா என தளபதி கூறியிருந்தார். அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் பஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காமல் இருந்த ராமதாஸ், அசுரன் படம்  வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார். திமுக எதிர் சவால் விட்டும் இதுவரை வாய் திறக்கவில்லை.  திமுக ஆட்சில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்றைக்கு நான் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஜான் தாமஸ், ஏழுமலை கொல்லப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் கண்ட கனவு நனவாகவில்லை அவர்களின் தியாகம் விரயம் ஆகிவிட்டது.

Related Stories: