அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடல்: கீழடி வரும் பொதுமக்கள் ஏமாற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே 5ம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டதால், கீழடிக்கு ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி 5ம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் தமிழக தொல்லியல் துறை சார்பில் துவக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதியம்மாள் ஆகியோரது நிலங்களில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் 52 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்தன. இந்த அகழாய்வில் தொன்மையான பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. தாழி வடிவிலான மண்பானை, நீண்டசுவர் போன்ற கட்டுமானம், சோழி, கழுத்து பதக்கம், சூது பவளம், மணிகள் உட்பட 900க்கும் மேற்பட்ட  பொருட்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, இதற்கு முன்னதாக நடந்த நான்காம் கட்ட அகழாய்வு பணி குறித்த ஆய்வறிக்கை வெளியானது.

 இதில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கீழடி அகழாய்வை பார்வையிட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வெளி நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஆர்வத்துடன் கீழடி வந்து, அகழாய்வில்  கிடைத்த பொருட்களை பார்வையிட்டு சென்றனர். இந்த 5ம் கட்ட அகழாய்வு தளத்தை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டுள்ளனர்.  5ம் கட்ட அகழாய்வில் நீண்டசுவர் கட்டுமானம், தொட்டி,  கால்வாய் உள்ளிட்டவை மட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  அகழாய்வு பணிக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி நிலம் கொடுத்த விவசாயிகளிடம், அவர்களது நிலங்களை ஒப்பந்தப்படி செப்டம்பரில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால் அகழாய்வுக்காக  தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் கடந்த வாரம் மூடப்பட்டன. அகழாய்வு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் கீழடி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்கின்றனர்.

அகழாய்வு பணிகளில் ஈடுபட்ட வந்த தொல்லியல் துறை மாணவர்கள் தங்க தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களும் அகற்றப்பட்டன. இங்கிருந்த தொல்லியல் துறைக்கு சொந்தமான தளவாட  பொருட்கள் அனைத்தும் மதுரை விரகனூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது குடில்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அகழாய்வில் எடுக்கப்பட்ட பானை ஓடுகள் அனைத்தும் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் அகழாய்வு தளத்தில் இருந்து தமிழக  தொல்லியல் துறையினர் முழுவதுமாக வெளியேற உள்ளனர்.

Related Stories: