ஏனாம் தீவை தாரை வார்க்க முயற்சி; கவர்னர் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜான்குமாரை ஆதரித்து நேற்று காலை, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் பிரமாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில், முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் திறந்த ஜீப்பில் வேட்பாளர் ஜான்குமார் சென்றார்.  தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள ஏனாமின் 5வது தீவை ஆந்திர மாநிலத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்க கவர்னர் கிரண்பேடி முயற்சி எடுத்து வருகிறார் என தெரிவித்தார். இதற்கு கவர்னர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏனாமின் 5வது தீவை ஆந்திராவுக்கு சொந்தம் என அந்த மாநிலத்தை ேசர்ந்த நபர், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்ந்துள்ள அந்த நபர், கவர்னர் கிரண்பேடியை சந்தித்து இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதனை விசாரிக்க கவர்னர் கிரண்பேடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இவர் புதுச்சேரி மாநில கவர்னரா? ஆந்திர மாநில கவர்னரா? புதுச்சேரி மக்கள் நலனை காக்க வேண்டுமா? அல்லது ஆந்திராவுக்கு, ஏனாம் தீவை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டுமா? இதற்காகத் தான் கிரண்பேடி இங்கு வந்தாரா? இதைத் தான் மு.க.ஸ்டாலின் ேகட்டார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ய கிரண்பேடிக்கு உரிமையோ, அதிகாரமோ எதுவும் கிடையாது. ஆந்திராவில் இருந்து ஒருவர் மனு கொடுக்கும்போது, அதை பரிசீலனை செய்ய கிரண்பேடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்ட விதிகளின்படி மனுவை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்குத்தான் அனுப்ப வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பேடி, அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு விசாரணை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. எந்த சட்டத்தில் இது கூறப்பட்டுள்ளது? விதிமுறைகளை மீறி செயல்படும் கவர்னர் கிரண்பேடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: