கருப்பு பட்டியலில் வைக்க FATF முடிவு: தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள  சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எப்ஏடிஎப்) கண்காணித்து வருகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை எல்லாம் இந்த அமைப்பு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தானில்  உள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி மோசடியில் ஈடுபடுவது, நிதி திரட்டுவதை தடுக்க, 27 நடவடிக்கைகள் கொண்ட செயல் திட்டம் ஒன்றை எப்ஏடிஎப் கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு வகுத்து  கொடுத்தது.

இவற்றை இந்தாண்டு அக்டோபருக்குள் நிறைவேற்ற கெடுவும் விதித்திருந்தது. ஆனால், அவற்றில் 5 நடவடிக்கைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றியது. இது குறித்து பாரிசில் கடந்த 5 நாட்களாக நடந்த எப்ஏடிஎப் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், செயல் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாத பாகிஸ்தானை தொடர்ந்து கருப்பு பட்டியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. செயல் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் பாகிஸ்தான் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்காலிகமாக கருப்புப் பட்டியலில் இருந்து தப்பித்திருந்தாலும், (சாம்பல் நிறப்பட்டியல்) எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது எந்த ஒரு நாடாக இருந்தாலும் பின்னடைவுதான் என ராணுவத் தளபதி பிபின் ராவத்  கூறியுள்ளார். இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் நெருக்கடியில் உள்ளது என்றும், அந்நாடு தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Related Stories: