திருச்செந்தூரில் இன்று காலை பரபரப்பு: கோயிலுக்கு செல்லும் வழியில் மின்கம்பி அறுந்து விழுந்தது: பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் மின் கம்பி இரு இடத்தில் இன்று காலை அறுந்து விழுந்தது. இதில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் கோயில் வளாகம் மற்றும் சுற்று பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளன. கோயிலுக்கு செல்லும்  தாலுகா ரோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. அதன் அருகில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இன்று காலை திடீரென்று மின் கம்பி ஒன்று தீப்பொறியுடன் அறுந்து விழுந்தது.

அந்த நேரம் பார்த்து அங்குள்ள கார் பார்க்கிங்கில் கேரள பக்தர்கள் வந்த வேனை நிறுத்தி பக்தர்கள் கீழே இறங்கி கொண்டிருந்தனர். வேன் அருகில்தான் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து  உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மின் சப்ளையை துண்டித்ததோடு, யாரும் அதை தொட்டு விடக்கூடாது என்பதற்காக தடுப்பு ஏற்படுத்தினர். இங்கு இந்த சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு சற்று முன் அதே ரோட்டில் தனியார் லாட்ஜ் பகுதியிலும் உயர் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து ரோட்டில் விழுந்தது.

நல்லவேளையாக அந்த நேரம் ஆட்கள்  நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அங்கும் மின்வாரியத்தினர் வந்து சப்ளையை துண்டித்து தடுப்பு ஏற்படுத்தினர். அறுந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணி உடனடியாக நடந்தது. மின் சப்ளை அதிக அளவில் வந்ததன் காரணமாக கம்பிகள் அறுந்திருக்கலாம் என தெரிகிறது. இரு இடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்த சம்பவம் பரபரப்பையும், பக்தர்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: