சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பறவைகள், செல்லப்பிராணிகளின் தாகம் தீர்க்க தண்ணீர் குவளைகள்: போலீசார், விலங்கு நல ஆர்வலர் நடவடிக்கை

சென்னை: கோடை காலங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில், விலங்கு நல ஆர்வலர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் வைக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களிலும் பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் சுற்றித்திரிவதால், அவை தங்களுக்கு தாகம் ஏற்படும் போது ரயில் நிலையத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து வருகின்றன. இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள், அவற்றிற்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் 58 ரயில்வே காவல் நிலையங்களில் பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் வைக்க முடிவு ெசய்தனர்.

அதன்படி நேற்று சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் ரயில்வே காவல் நிலையத்தில் தண்ணீர் குவளைகள் வைத்தனர். இதில் சென்ட்ரல் ரயில்வே துணை சூப்பிரண்ட் முருகன், இன்ஸ்பெக்டர்கள் தாமஸ் ஏசுதாசன், வேலு, சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டு, பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்காக தண்ணீர் நிரப்பிய குவளைகளை ரயில்வே காவல் நிலையத்தில் வைத்தனர். மேலும் பெரம்பூர், அரக்கோணம் உள்ளிட்ட ரயில்வே போலீஸ் நிலையங்களுக்கும் தண்ணீர் குவளைகளை வழங்கினார். பின்னர் ரயில்வே டி.எஸ்.பி முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் தாகத்தை தீர்க்க விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ் உடன் இணைந்து சுத்தமான தண்ணீர் நிரப்பிய குவளைகளை ரயில் நிலையத்தில் வைத்துள்ளோம். இந்த தண்ணீரில் கொசுக்குகள் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்ளப்படும். மேலும் பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் குடித்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்,’’ என்றார்.

Related Stories: