சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கலு சாமி... மைசூரு கோயிலில் மாஜி.க்கள் அடித்த கூத்து

மைசூரு: மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் சாரா மகேஷ் மற்றும் தகுதி நீக்க எம்எல்ஏ எச்.விஸ்வநாத் ஆகியோரின் சத்தியம் செய்யும் சம்பவம் வெறும் நாடகமாக முடிந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏ எச்.விஸ்வநாத் காங்கிரஸ்-மஜத கூட்டணி மீது அதிருப்தி கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் இவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  ‘கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த  விஸ்வநாத் பணம் பெற்று கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பணத்திற்காக விலை போயுள்ளார்,’ என்று முன்னாள் அமைச்சர் சாரா  மகேஷ் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, ‘நான் பணம் வாங்கி கொண்டு  விலை போயுள்ளேன் என்று  மைசூரு சாமுண்டீஸ்வரி மலைக்கோயிலில்  சாரா மகேஷ் சத்தியம் செய்ய தயாரா?’ என்று விஸ்வநாத் சவால் விடுத்தார். இதற்கு, சாரா  மகேசும் ஒப்பு கொண்டார். அதேபோல், நேற்று காலை 8.50 மணிக்கு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்து கோபுரத்தின் அருகே  காத்திருந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விஸ்வநாத்தின் அழைப்பின் பேரில்  நான் கோயிலுக்கு வந்துள்ளேன். என்னுடைய பேச்சின்படி நான் நடந்து  கொண்டுள்ளேன். நான் விஸ்வநாத்துக்கு எதிராக கூறிய புகார் உண்மை. அவர்  பணத்திற்கு மயங்கி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது உண்மை. இதை அம்மனிடம்  கூறியுள்ளேன். நான் சத்தியம் செய்தது போல், அவரும் உள்ளே வந்து  பணம்  வாங்கவில்லை என சத்தியம் செய்ய வேண்டும்,’’ என்று கூறி அங்கேயே ஒரு மணி நேரம்  காத்திருந்தார். இதற்கிடையே,  கோயிலுக்கு வெளியே வந்து காத்திருந்த விஸ்வநாத், சாரா மகேசை வெளியே வர அறைகூவல் விடுத்தார்.  ஆனால், அவர் வெளியே வரவில்லை. இதனால், ‘‘சாரா மகேஷ் கூறியதில் எந்த உண்மையும்  இல்லை. அதனால்தான், பயந்து கொண்டு கோயிலுக்குள் இருக்கிறார். நான் சொன்னபடி நடந்து  கொண்டுள்ளேன்,’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விஸ்வநாத்  சென்றதும் சாரா மகேசும் வெளியே வந்தார். ‘‘விஸ்வநாத் பணம் வாங்கியதால்தான் கோயிலுக்குள் வந்து சத்தியம் செய்யவில்லை,’’ என்று கூறிவிட்டு அவரும் நடையை கட்டினார். இதனால், அங்கு காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து, ‘இவங்களுக்கு சாமி மேலே சத்தியம் செய்வதெல்லாம் சர்க்கரை பொங்கலாக்கும்...’ என்று திரும்பி சென்றனர்.

Related Stories: